நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சேதுரஸ்தா பகுதியில் வசித்து வருபவர் தான் உதயகுமார்(50). இவரது ஆட்டோவை அதே பகுதியில் வசித்து வரும் சச்சிதானந்தம் என்பவர் ஓட்டி வந்துள்ளார். சென்ற 15-ஆம் தேதிஇவர் தன் வீட்டு வாசலில் ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். இதையடுத்து மறுநாள் பார்த்தபோது ஆட்டோவை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக வேதாரண்யம் காவல் நிலையத்தில் உதயகுமார் புகாரளித்தார். அந்த புகாரின் படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதா், சப்-இன்ஸ்பெக்டா் கலியபெருமாள் போன்றோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நேர்கொண்டனர். இதற்கிடையில் நேற்று காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கருப்பம்புலம் தனியார் பள்ளி அருகில் மெயின் ரோட்டில் வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அது திருட்டுப்போன உதயகுமாரின் ஆட்டோ என்பது தெரியவந்தது. மேலும் இந்த ஆட்டோவை திட்டச்சேரி பகுதியில் வசித்து வரும் ஒரு நபர் திருடி 2 பேரிடம் விற்றதும் கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து ஆட்டோவை வாங்கிய பாபநாசம் பகுதி அய்யம்பேட்டை ரயிலடி தெருவை சேர்ந்த கார்த்திக்(40), சிறுமகநல்லூரை சேர்ந்த கேப்டன் ராஜா (41) ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து வண்டியை பறிமுதல் செய்தனர். அதுமட்டுமின்றி ஆட்டோவை திருடி விற்ற திட்டச்சேரியை சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.