உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள விடுதி அறையில் அனிகா ரஸ்தோகி (19) மாணவி கடந்த சனிக்கிழமை இரவு இறந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர். அனிகா ரஸ்தோகி, ராம் மனோகர் லோஹியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.அனிகா தனது அறையின் தரையில் கிடந்தார். மேலும் மயக்க நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். சனிக்கிழமை இரவு 10 மணியளவில் மாரடைப்புகாரணமாக அனிகா உயிரிழந்ததாக ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.ஏ., எல்.எல்.பி. 3-ம் ஆண்டு மாணவியான அனிகா ரஸ்தோகி, மகாராஷ்டிர கேடரின் 1998 பேட்ச் இந்திய போலீஸ் சர்வீஸ் (IPS) அதிகாரியான சஞ்சய் ரஸ்தோகியின் மகள் ஆவார். சஞ்சய் ரஸ்தோகி தற்போது தேசிய புலனாய்வு அமைப்பில் (என்ஐஏ) இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பணியாற்றி வருகிறார்.அனிகாவின் உடலில் உடைகள் அப்படியே இருந்ததாகவும், உடலில் காயங்கள் எதுவும் தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.விடுதி அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்ததாகவும், சந்தேகப்படும்படியான எதுவும் உள்ளே காணப்படவில்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.