பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் மானு பாகெர் பங்கேற்றார். இந்தப் போட்டியில் 8 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 221.7 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். இதன் மூலம் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவின் பதக்கவேட்டையை ஆரம்பித்துள்ளார். இதைத்தொடர்ந்து இவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியாவிற்காக துப்பாக்கி சூடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளதால் இந்த வெற்றி சிறப்பு வாய்ந்தது என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் பிரதமர் மோடியின் இந்த வாழ்த்துக்கு மானு பாகெர் நன்றி தெரிவித்தார். இது குறித்து மானு பாகெர் தனது இணையதள பக்கத்தில் உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் என்று கூறியுள்ளார். அனைத்து ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றும் இது எனக்கு மிகப்பெரிய விஷயம் என்று கூறியுள்ளார்.