குஜராத்தின் முக்கிய தொழிலாக விளங்குவது வைர உற்பத்தி. ஆனால் பல தொழிலாளர்கள் இந்த தொழிலில் ஏற்பட்ட மந்த நிலையால் வேலை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர். இதனால் பல தொழிலாளர்களுக்கு தற்கொலை எண்ணம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தொழிலாளர்களை காக்கும் பொருட்டு குஜராத்தில் உள்ள வைர தொழிலாளர்கள் சங்கத்தினால் தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையில் கடந்த 20 நாட்களில் 1500 தொழிலாளர்கள் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்றுள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதில் ஒரு நாளைக்கு 75 தொழிலாளர்கள் ஆலோசனை பெறுகின்றனர் என கூறப்படுகிறது. மேலும் கஷ்டப்படும் குடும்பங்களுக்கு வைர தொழிலாளர் சங்கம் உதவி செய்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை தொழிலாளர் சங்கம் வழங்குவதாக கூறப்படுகிறது. மேலும் வைர வியாபாரி லால்ஜி படேல்,கஷ்டப்படும் 35 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 15,000 ரூபாய் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.