இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேனியல் லாரன்ஸ் 9 ரன்னிலும், கேப்டன் ஒல்லி போப் ஒரு ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 40 ரன்னில் அவுட்டானார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் விளையாடி சதமடித்த ஜோ ரூட், 33வது சதத்தை பதிவு செய்தார். அவர் 143 ரன்னில் ஆட்டமிழந்தார்.அவரை தொடர்ந்து அதிரடியாக ஆடிய கஸ் அட்கின்சன் 105 பந்துகளில் சதமடித்தார். அவர் 118 ரன்னில் அவுட்டானார். இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில 427 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.இலங்கை சார்பில் அஷிதா பெர்னாண்டோ 5 விக்கெட்டும், மிலன் ரத்னாயகே, லஹிரு குமரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.