திருவண்ணாமலை மாவட்ட செய்திகள் தவறான சிகிச்சை செய்த மருத்துவர்கள்….கோமாவில் இருக்கும் பெண்….உறவினர்கள் முற்றுகை….!! Gayathri Poomani28 June 2024056 views திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தெள்ளுர் கிராமத்தில் வசிக்கும் சின்னராஜ்-குமாரி தம்பதியரின் மகளான ஜெயந்திக்கும் ராம்பிரகாஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணான ஜெயந்தியை தல பிரசவத்திற்காக ஆரணி பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சென்ற வருடம் மே 25-ஆம் தேதி சேர்த்துள்ளனர். பின்னர் அங்கு ஜெயந்தியை மருத்துவர்கள் பரிசோதனை செய்து வயிற்றில் குழந்தை அசைவற்று இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் ஜெயந்தியின் வயிற்றில் அசைவு தெரிவதாக அவரின் உறவினர்கள் கூறியதன் அடிப்படையில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அந்த சிகிச்சையில் ஜெயந்திக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறகு திடீரென ஜெயந்திக்கு உடல் நலம் மோசமான நிலை ஏற்பட்டதன் பேரில் அவரை உடனடியாக மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆரணி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் கோமா நிலைக்கு சென்று விட்டதாக கூறியுள்ளனர். பின்னர் இங்கு இரண்டு மாத மருத்துவ சிகிச்சை பின் ஜெயந்தி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கே அவருக்கு தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வருகிறது. பின்னர் 13 மாதம் ஆகியும் கோமா நிலையில் இருக்கும் ஜெயந்தி குறித்து அவரின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் சுகாதாரத் துறைக்கு தொடர்ந்து புகார் மனு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் பாலச்சந்தர் ஆரணி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவ அலுவலர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் மருத்துவக் குழுவினர் சம்பவத்தன்று இருந்த மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மயக்கவியல் மருத்துவர்கள் ஆகியோரை தனித்தனியே விசாரணை நடத்தியுள்ளார். இது குறித்து அறிக்கை சென்னை சுகாதாரத்துறைக்கு தெரிவித்து பின் நடவடிக்கை எடுக்கப்படும் என இணை இயக்குனர் கூறியுள்ளார். இதனை அறிந்த ஜெயந்தியின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆரணி அரசு மருத்துவமனை முன்பாக திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆரணி அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்பிற்காக காவல்துறையினர் வரவைக்கப்பட்டுள்ளது.