செய்திகள் மாநில செய்திகள் துங்கபத்ரா அணை….கேட் பொருத்தும் பணி தற்காலிகமாக நிறுத்திவைப்பு…!!! Sathya Deva16 August 2024076 views கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் முனிராபாத் பகுதியில் துங்கபத்ரா அணை உள்ளது. இந்த அணையில் மொத்தம் 32 மதகுகள் உள்ளன. தென்மேற்கு பருவமழையால் கடந்த வாரம் அணை முழு நீர்மட்ட கொள்ளளவான 105 டி.எம்.சி.யை எட்டியது. இதனால் நீரின் அழுத்தம் காரணமாக கடந்த 10-ந்தேதி இரவு அணையின் 19-வது மதகு சங்கிலி இணைப்பு உடைந்து நீரில் மதகு அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அணையை பாதுகாக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து நேற்று முன்தினம் முதல் மதகு பொருத்தும் பணி தொடங்கியது. இதற்காக ஜிண்டால் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 60 அடி அகலம் கொண்ட கேட் உறுப்பு தூண்கள் அணை பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. ராட்சத கிரேன்கள் உதவியுடன் இரும்பு கேட்டின் பாகங்கள் எடுத்து பொருத்தும் பணி இரவு-பகலாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வினாடிக்கு 35 ஆயிரத்து 437 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் மதகு பொருத்தும் பணியில் தோய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் கேட் உறுப்பு தூண்கள் மதகு பகுதியில் சரியாக பொருந்தவில்லை. இதனால் கேட் பொருத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு வேறு தூண்கள் கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.