தைவானின் கிழக்கு நகரான ஹூவாலியனில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.3 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்தது. ஒரே நாளில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இது ஆகும். எனினும், இதில் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை. நிலநடுக்கம் காரணமாக தலைநகர் தைபேவில் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் அச்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுரங்க சேவைகள் குறைந்த வேகத்தில் இயங்க அனுமதிக்கப்பட்டன. நிலநடுக்கம் பூமியில் இருந்து 9.7 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர். தைவானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையாகி இருக்கிறது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம், அந்நாட்டு வரலாற்றில் கடந்த 25 ஆண்டுகளில் ஏற்படாத மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தில் ஒன்பது பேர் உயிரிழந்த நிலையில், 900-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.