கடலூர் மாவட்டம் காராமணிகுப்பம் ராஜாராம் நகரில் வசித்து வந்த கமலேஸ்வரி, அவரது மகன் சுகந்தகுமார், பேரன் நிஷாந்த் ஆகிய மூன்று பேரும் வீட்டில் வெட்டப்பட்ட நிலையில், பாதி உடல் கருகி உயிரிழந்து கிடந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சங்கர் ஆனந்த்(21) என்பவர் இந்த கொலை நடந்த நாளிலிருந்து தலைமறைவாக இருப்பதும், அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
இதனையடுத்து தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு சென்னையில் பதுங்கி இருந்த சங்கர் ஆனந்த் மற்றும் அவரது நண்பர் சாகுல் ஹமீது ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சங்கர் ஆனந்த் தந்தை பழனி கடந்த 2021 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். இதன் பிறகு கடந்த ஜனவரி மாதமும் அவருக்கு தாய் லட்சுமி ரயிலில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் லட்சுமிக்கும் சுகந்த குமாருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததால் தான் லட்சுமி தற்கொலை செய்து கொண்டதாக வதந்தி பரவியது.
இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த் சுகந்த குமாரை கொலை செய்ய 6 மாதமாக திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 12-ஆம் தேதி இரவு சுகந்தகுமார் வீட்டிற்கு சென்று சுகந்தகுமார் அவரது தாயார் கமலேஷ்வரி ஆகியோரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனைதொடர்ந்து வீட்டில் இருந்த நகை பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வெளியே செல்லும்போது சுகந்த குமாரின் பிள்ளை நிஷாந்த் துக்கத்தில் இருந்து விழித்து ஆனந்தை பார்த்துள்ளார்.
மேலும் ஆனந்தும் அதே பகுதியை சேர்ந்தவன் என்பதால் நிஷாந்திற்கு அவரை நன்றாக தெரியும். எனவே ஆனந்த் சிறுவனையும் வெட்டி கொலை செய்து விட்டு வீட்டை வெளி பக்கமாக பூட்டி விட்டு எதுவும் நடக்காததுபோல் வெளியே சென்றார். இந்நிலையில் கொலை நடந்து 2 நாட்கள் ஆகியும் யாரும் அதை கண்டுபிடிக்கவில்லை. ஆகையால் 14-ஆம் தேதி மீண்டும் சுகந்தகுமார் வீட்டிற்கு சென்று தனது நண்பர் ஷாகுல்ஹமீதுவிடம் பெட்ரோல் வாங்கி வர சொல்லி அதனை சுகந்தகுமார், காமலேஷ்வரி ஆகியோர் மீது ஊற்றி எரித்துள்ளார். இதனையடுத்து ஆனந்த் மற்றும் அவரது நண்பர் சென்னைக்கு தப்பி சென்றுள்ளார். இதனை அறிந்த போலீசார் சங்கர் ஆனந்த் மற்றும் ஷாகுல் ஹமீது மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.