விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தேன்பேர் ஈச்சங்காடு பகுதியில் நாகப்பன் ஜெயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று இவர்கள் வளர்த்து வரும் 11 மாடுகளை மேய்ச்சலுக்காக அப்பகுதியில் உள்ள வயலில் விட்டனர். அன்று இரவு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த மின் கம்பி அறுந்து வயலில் விழுந்துள்ளது. அப்போது நாகப்பனின் 6 மாடுகள் அந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.
இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்றவர்கள் மாடுகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டித்தனர். மேலும் உயிரிழந்த மாடுகளை நேமூர் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.