கன்னியாகுமரி மாவட்டம் அருமனை மாங்கோடு ஐம்புள்ளி பகுதியில் அபிஷேக் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ளவர்களிடம் இருசக்கர வாகனத்தை உதவியாக கேட்டு ஓட்டி வந்துள்ளார். அப்படி வாங்கிய வாகனங்களை அவர் திருப்பிகொடுக்காமல் அது திருடு போய்விட்டது என உரிமையாளர்களிடம் கூறிவந்துள்ளார். அதேபோல் மாங்கோடு பகுதியை சேர்ந்த ஏசுதாஸ் என்பவரிடம் அபிஷேக் இருசக்கர வாகனத்தை வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்காமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் ஏசுதாஸ் பலமுறை அவரிடம் கேட்டும் ஆகாஷ் முறையாக பதில் அளிக்காததால் அவர் அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அபிஷக்கை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அபிஷேக் ஏசுதாஸின் இரு சக்கர வாகனத்தை மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு இரும்பு கடையில் விற்பனை செய்து பணம் பெற்றதாக ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து போலீசார் அந்த கடைக்கு சென்று ஏசுதாஸின் இருசக்கர வாகனத்தை மீட்டனர். மேலும் அபிஷேக் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து மற்றவர்களிடம் வாங்கிய இருசக்கர வாகனங்களின் நிலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.