நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்டத்தின் குத்தகை வருகின்ற 2028 ஆம் ஆண்டு முடிவடையும் நிலையில் தொழிலாளர்களை அதற்கு முன்னதாகவே வெளியேற்றி வருகின்றனர். அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களை கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வு விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கியதாக தொழிலாளர்கள் புகார் அளித்தனர்.
இந்த வழக்கு மதுரை ஹைகோர்ட் கிளை நீதிமன்றத்தில் நடந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி மாஞ்சோலையில் இருந்து தொழிலாளர்களை வெளியேற்றக் கூடாது என உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் மறு உத்தரவு வரும் வரை மாஞ்சோலை தொழிலாளர்கள் அங்குள்ள குடியிருப்புகளில் தங்கிக் கொள்ளலாம் என தேயிலை தோட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
இந்நிலையில் மாஞ்சோலை தொழிலாளர்கள் தமிழக அரசிடம் மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதியில் பேனர் ஒன்றை அமைத்துள்ளனர். அதில் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும், மாஞ்சோலை பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 10 ஏக்கர் வீதம் நிலம் வழங்க வேண்டும், மேலும் இழப்பீடாக 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.