பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பெண் வழக்கறிஞர் உள்ளிட்ட மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 11 பேரை கைது செய்த போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்தனர்.
இதனிடையே கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்ய கைதி திருவேங்கடத்தை கடந்த 15ஆம் தேதி அழைத்து சென்றனர். அப்போது திருவேங்கடம் தப்பி ஓட முயன்ற போது போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக மேலும் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்வதற்கு அளிக்கப்பட்ட பண பரிவர்த்தனங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டபோது வழக்கறிஞர் மலர்கொடி மற்றும் ஹரிஹரன் ஆகிய இருவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பெண் வழக்கறிஞர் மலர்கொடி, ஹரிஹரன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.