ஈரோடு மாவட்ட பேருந்து நிலையத்தில் 15 பேருந்துகள் புதிதாக இயக்கப்பட்டன. இதனை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சோ முத்துசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் போக்குவரத்து துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப முதலமைச்சர் உத்தரவிட்ட நிலையில், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 685 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் மற்ற போக்குவரத்துக் கழகத்தில் உள்ள பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என தெரிவித்தார்.
இதனையடுத்து அதிமுக ஆட்சியில் பேருந்து கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பததால் சுமார் 2000 வரை தடங்களில் பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது. தற்போது புதிய நியமனங்கள் செய்து 800 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. கூடிய விரைவில் அனைத்து வழித்தடங்களிலும் தேவையான பேருந்துகள் இயக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். இதை தொடர்ந்து அதிவேகத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளால் விபத்துகள் அதிகமாக ஏற்படுவதால், குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.