ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள சேர்மம், ஒசட்டி காடட்டி, சுஜில் கரை, திங்களூர், கோட்டைமாளம், மாவநத்தம், பெஜலட்டி, காளி திம்பம், தடசலட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களுக்கு திம்பம் மலைப்பாதை வழியாக மின்சாரம் வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்பு அப்பகுதி மின் கம்பத்தில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து 4 நாட்களாக மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மின் மோட்டார் இயக்க முடியாததால் கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிப்படைந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் ஆங்காங்கே பள்ளத்தில் தேங்கி இருக்கும் குடிநீரை எடுத்து குடித்து வருகின்றனர்.
இது போல் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 3 நாட்கள் மின்சாரம் துண்டித்ததில் அப்பகுதி பொதுமக்கள் பள்ளத்தில் தேங்கி இருந்த நீரை குடித்து வாந்தி, பேதி ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மின் இணை ப்பு கம்பிகளை சரி செய்து மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.