சமீபத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமம் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் 4 பேரில் ஒருவருக்கு உடல் பருமன், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் ஏற்படுவதற்கான முந்தைய நிலை பாதிப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே கல்வி நிறுவனங்களில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
அதன் அடிப்படையில் நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களில் செயல்பட்டு வரும் கேன்டின்களில் ஆரோக்கியம் இல்லாத உணவு பொருள்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அதிக அளவில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு செயலர் மனிஷ் ஆர் ஜோஷி அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மேலும் ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றும், அதனை விற்பனை செய்ய ஊக்கப்படுத்த வேண்டும் என தேசிய ஊட்டச்சத்து ஆலோசனை அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சட்டக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் யு.ஜி.சி உத்தரவிட்டுள்ளது.