சென்னை வியாசர்பாடி சுந்தரம் 4-வது தெருவில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த 1-ஆம் தேதி விஜயலட்சுமிக்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி வீட்டில் இருந்த பச்சிளம் குழந்தை வயிற்றில் ரத்த காயத்துடன் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி உடனடியாக குழந்தையை சென்னை எழும்பூர் குழந்தை நல மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 9-ஆம் தேதி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனையடுத்து குழந்தையின் வயிற்றில் கூர்மையான ஆயுதங்களால் குத்தப்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து மருத்துவமனை சார்பில் வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் குழந்தையின் தந்தை ராஜ்குமார் ஏற்கனவே இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரத்தில் கத்திரிக்கோலை எடுத்து குழந்தையை குத்தி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதை அறிந்த போலீசார் ராஜ்குமாரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.