தமிழக அரசு ஜூலை 2-ஆம் தேதியில் இருந்து மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த மின் கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே போராட்டம் நடைபெற்றுள்ளது.
அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், கடந்த இரண்டு வருடங்களில் 33.7 சதவீத மின் கட்டணத்தை தி.மு.க அரசு உயர்த்தி உள்ளது. இதன் மூலம் 40,000 கோடி வருமானம் கிடைக்கிறது, ஆனாலும் மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக இன்னும் பொய் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். மின்வாரிய கடன் 10,000 கோடி மட்டுமே. மின் துறையில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது.
ஆகவே நிர்வாக திறமை இல்லாத ஆட்சியை எதிர்த்து மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கூறியுள்ளார். மேலும் மின் கட்டண உயர்வை வாபஸ் பெரும் வரை இந்த போராட்டம் தொடரும் எனவும் அவர் கூறினார். இந்த போராட்டத்தில் வக்கீல் பானு, சிவகுமார் எம்.எல்.ஏ, ஈகை தயாளன், ரா.சி. வெங்கடேசன் என கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.