சமீபத்தில் கள்ள நோட்டுகள் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் இரண்டு நபர்கள் 500 ரூபாய் நோட்டுகள் அடங்கிய ஒரு பணக்கட்டை பிரித்து காட்டுகிறார்கள். அப்போது 500 ரூபாய் நோட்டுகளில் முதல் மற்றும் கடைசியில் மட்டும் 500 ரூபாயாக இருந்தது. உள்ளே இருந்த மற்ற நோட்டுகள் அனைத்தும் வெள்ளை பேப்பர்களாக இருந்துள்ளது. மேலும் அந்த ரூபாய் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் இருந்து பெறப்பட்டது என்றும், வங்கியில் இருந்து பணம் பெறும் போது ஊழியர்களிடமே அதனை பிரித்து சொல்லி சரிபார்க்க வேண்டும் எனவும் மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
இது குறித்து விளக்கம் அளித்த ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தங்களின் பெயர் மற்றும் லோகோவை போலியாக பயன்படுத்தி இதுபோன்ற வீடியோக்களை உருவாக்கி வெளியிடுவதாக தெரிவித்தனர். இந்த வீடியோ உண்மையானது அல்ல என தெரிவித்தனர். மேலும் இந்த வீடியோ கடந்த ஏப்ரல் மாதமே வெளியான நிலையில் தற்போதும் அது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.