
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே மழவராயநல்லூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் ராஜா என்பவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக பவானி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. தற்போது பவானி 2 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜா தன்னுடைய பெற்றோருடன் உறவினர் வீட்டு காதணி விழாவிற்கு நகை வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது பவானி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் ராஜா வீட்டிற்கு வந்து பார்த்தபோது பவானி தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதைப்பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்த தகவலின் பேரில் விக்ரமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பவானியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய முதல் கட்ட விசாரணையில் பவானி தன்னுடைய தாயார் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கணவரிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் பிறகு செல்லலாம் என்று கூறியதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் பவானியின் பெற்றோர் தன்னுடைய மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் கொடுத்துள்ளனர். மேலும் திருமணமாகி 3 மாதங்கள் தான் ஆகிறது என்பதால் இந்த சம்பவம் தொடர்பாக உடையார்பாளையம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.