தஞ்சாவூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் வேலூர் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் அந்த பெண்ணின் முதல் கணவன் இறந்துவிட்டதால் மறுமணம் செய்வதற்காக திருமண தகவல் இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். அதனை பார்த்த வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த வாலிபர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அவரும் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு 2-வது திருமணம் செய்து கொள்ள பெண் பார்த்து வந்ததாக தெரிகிறது.
எனவே வாலிபரும் இளம்பெண்ணும் செல்போன் மூலம் பழகிய நிலையில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மைசூரில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த ஓரிரு மாதத்திலேயே அந்த பெண் மீண்டும் சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவர் ஊருக்கு வரும் போதெல்லாம் வாலிபர் வீட்டிற்க்கு அழைத்து செல்லாமல் சென்னை, பெங்களூர் போன்ற இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இது குறித்து இளம்பெண் கேட்டபோது திருமணத்திற்கு என் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என கூறிவிட்டார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக வாலிபர் இளம்பெண்ணுடன் பேசுவதை நிறுத்திய நிலையில் அவர் வேலூர் குடியாத்தம் பகுதியில் உள்ள வாலிபரின் வீட்டிற்கு சென்று விசாரித்தார். அப்போது வாலிபரை பார்க்க விடாமல் அவரது பெற்றோர் இளம்பெண்ணை திருப்பி அனுப்பி விட்டனர். மேலும் வாலிபருக்கு 3-வதாக திருமணம் நடக்க இருப்பதாக கூறி புது பெண்ணுடன் எடுத்த புகைப்படங்களை அனுப்பி உள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் வேலூர் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் என் கணவருக்கு நடக்க இருக்கும் 3-வது திருமணத்தை நிறுத்தி அவரை என்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.