கல்லூரியில் சேர்ந்து அதன் பிறகு செப்டம்பர் 30க்குள் சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களுக்கு அவர்கள் கட்டணமாக செலுத்திய மொத்த பணத்தையும் கல்லூரி நிர்வாகம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என யுஜிசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து யுஜிசி செயலர் மனிஷ் ஆர் ஜோஷி வெளியிட்ட அறிக்கையில் கல்லூரியில் சேர்ந்து குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களுக்கு விதிமுறைகளை பின்பற்றி அவர்கள் கட்டிய கட்டணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் சில கல்லூரிகள் இதனை முறையாக பின்பற்றுவது இல்லை.
இதனால் செப்டம்பர் 30க்குள் கல்லூரி சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களுக்கு அவர்கள் கட்டிய முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும் என்றும் அக்டோபர் 30க்குள் ரத்து செய்யும் மாணவர்களுக்கு சேர்க்கை பணிகளுக்கான கட்டணம் ஆயிரம் ரூபாயை மட்டும் வசூலிக்கலாம். அதற்கு மேல் காலதாமதமாக ரத்து செய்பவர்களுக்கு அதற்கேற்றார் போல் கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம்.
இந்த விதிமுறைகளானது யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கல்லூரிகளுக்கும் பொருந்தும். இதனை மீறும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.