கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதி பெய்த மழையின்போது தொடர்ச்சியான நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவின்போது மண்ணுக்குள் ஏராளமான வீடுகள் புதைந்தன. அதில் இருந்தவர்கள் மற்றும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதற்காக வயநாடு மாவட்டம் மேப்பாடி, முண்டகை பகுதிளில் உள்ள பல பள்ளிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டன. இந்த நிலையில் நிவாரண முகாம்களில் தங்கி இருந்தவர்கள் அரசு ஏற்பாடு செய்த வீடுகளுக்கு மாறத் தொடங்கினர்.
இதனை தொடர்ந்து பல பள்ளிகள் கடந்த 27-ந் தேதி முதல் செயல்பட தொடங்கின. அங்கு வகுப்புகள் தொடங்கப்பட்டு மாணவ-மாணவிகள் கல்வி தொடர்ந்தது. இந்த நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை, சூரல்மலை பகுதியை சேர்ந்த 2பள்ளிகள் மேப்பாடியில் கிராம பஞ்சாயத்து சமுதாயக் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தற்காலிக இடங்களில் இன்று செயல்பட தொடங்கியது. மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் வந்து வகுப்புகளில் கலந்து கொண்டனர்.