திருவள்ளூர் மாவட்டம் ராகவரெட்டிமேடு பகுதியில் வசித்து வரும் திருச்செல்வம் என்பவர் புதுவாயல் பகுதியில் உள்ள அரசு மதுபானக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு டாஸ்மார்க்கில் விற்பனையான பணத்தை எடுத்துக்கொண்டு இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென 5 வாலிபர்கள் அவரை வழிமறித்தது கத்தியால் மிரட்டி 12 லட்சம் ரூபாயை பறித்துக்கொண்டு காரில் தப்பியோடியுள்ளனர்.
இதுகுறித்து திருச்செல்வம் அளித்த புகாரின் அடிப்படையில் சோழவரம் காவல்துறையினர் விசாரணை செய்து குற்றவாளிகளான அருண், செயசீலன் என்ற கார்த்திக், சோழவரம் அருண், பக்ருதீன், மதன்குமார் ஆகிய 5 வாலிபர்களை கைது செய்தனர். இந்த வழக்கு கடந்த 7 ஆண்டுகளாக பொன்னேரி கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மேலும் இறுதியாக வழக்கை விசாரித்த நீதிபதி பிரேமாவதி குற்றம் செய்த 5 வாலிபர்களுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா 1000 ருபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து கைதான வாலிபர்களை காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.