தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் சேகரிப்படும் குப்பை கழிவுகள் ஜெபமாலைபுரத்தில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுவது வழக்கம். இன்று காலையில் அந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் குப்பை கிடங்கில் மளமளவென எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் ஜெபமாலைபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. மேலும் குப்பை கழிவுகளால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசியதால் சுகாதாரத்துறையினர் உடனடியாக அங்கு வசிப்பவர்களுக்கு முகக்கவசம் வழங்கினார்கள். இதனையடுத்து அப்பகுதியில் யாருக்காவது மூச்சு விடுவதில் சிரமம் இருக்கிறதா என வீடு வீடாக சென்று கேட்டறிந்தனர்.