மங்களூரில் உள்ள தட்சிண கன்னடா மாவட்டத்தில் குக்கே சுப்பிரமணிய ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் யானை ஒன்று வளர்க்கப்பட்டு வரும் நிலையில், இந்த யானையிடம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆசி பெறுவது வழக்கம். கடந்த செவ்வாய்க்கிழமை இந்த கோவிலுக்கு துணை முதல் மந்திரியான டி.கே. சிவகுமார் வருகை தந்தார். அவரை வரவேற்பதற்காக கோவில் நிர்வாகிகள் மற்றும் யானை கோவில் வாசலில் காத்திருந்தது.
அந்த சமயத்தில் ஒரு நபர் மதுபோதையில் கோவிலுக்குள் நுழைந்துள்ளார். அவர் கோவில் யானையை கடந்து சென்ற போது கோபமடைந்த யானை அந்த வாலிபரை தும்பிக்கையால் கீழே தள்ளிவிட்டது. இதில் லேசான காயமடைந்த அந்த நபரை கோவில் நிர்வாகிகள் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கோவில் நிர்வாகிகள் கூறுகையில் பக்தியுடன் வருபவர்களை ஆசீர்வதிக்கும் யானை மது போதையில் வந்த வாலிபரை கோபத்துடன் தள்ளிவிட்டது எனக் கூறியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.