தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகின்றது. இதைப்போல கேரளாவிலும் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் முல்லைப் பெரியார் அணையின் நீர் பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. இதனால் அங்கு சென்ற இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் சென்ற நான்கு நாட்களில் 4 அடி உயர்ந்திருப்பதாகவும், தற்போது ஒரே நாளில் இரண்டு அடி உயர்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இதில் அணையில் இருந்து வினாடிக்கு 113 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இவற்றின் நீர் இருப்பு தற்போது 2984 மி.கன அடியாக இருக்கிறது. இருப்பினும் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதால் லோயர் கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் மூன்று ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டு 102 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து வைகை அணையின் நீர்மட்டமானது தற்போது 48.29 அடியாக இருக்கிறது. மேலும் கம்பம் அருகாமையில் இருக்கும் சுருளி அருவியில் கனமழை காரணத்தினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அப்பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.