நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த கோமதி கிருஷ்ணமூர்த்தி என்பவர் முக்கூடலில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பாப்பாக்குடி பகுதியில் இன்றளவும் குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருகிறது. எனவே இனிமேல் அந்த பகுதியில் குழந்தை திருமணம் நடைபெறாமல் இருக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு மத்தியில் ஆழமான விழிப்புணர்வை கொண்டு வர வேண்டும் என நினைத்த கோமதி கிருஷ்ணமூர்த்தி அவரே களத்தில் இறங்கினார். இந்நிலையில் அவர் சமூக நலத்துறை அலுவலர் பத்மா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உதவியுடன் பள்ளிகளுக்கு சென்று வில்லுப்பாட்டு பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் போதை ஒழிப்பு போன்ற நாடகத்திலும் நடித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் இதுபோன்று கிராமிய கலைகள் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் அவர்கள் அதை எளிதாக புரிந்து கொள்வார்கள் என தெரிவித்தார். அவர் முயற்சி செய்த இச்சம்பவம் அனைவரிடையே பாராட்டை பெற்றுள்ளது.