காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 5,746 ஏக்கர் சுற்றளவில் மிக பெரிய விமான நிலையம் அமைக்கவுள்ளதாக அரசு அறிவித்தது. இந்த விமானநிலையம் அமைந்தால் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடியிருப்புகள், நீர்நிலைகள், விளைநிலங்கள் பாதிக்கப்படும். எனவே எகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து 705 நாட்களாக போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் பரந்தூர் விமான நிலையத்தில் தொடர்ந்து கட்டிட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சியில் உள்ள 58 கிராமங்களில் எகனாபுரத்தை புறக்கணித்துவிட்டு மற்ற அனைத்து கிராமங்களிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதனை கண்டித்த எகனாபுரம் ஊர் பொதுமக்கள் மற்றும் போராட்ட குழுவினர் தமிழக அரசு மற்றும் பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து வருகின்ற 3 ஆம் தேதியில் இருந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தொடர் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.