திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள சொரைக்காப்பாளையம் பகுதியில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் சூரியகுளம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் ஊட்டியை சேர்ந்த ராதிகா என்ற பெண்ணை காதலித்து கடந்த 3ஆம் தேதி தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இவர்களுக்கு அஜித் தந்தை தமிழரசன் அவர்களது குலதெய்வம் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்தார். இந்நிலையில் கடந்த 5-ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அஜித் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து அவரது தந்தை தமிழரசன் அளித்த புகாரின் அடிப்படையில் ஆரணி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது ஜமுனாமரத்தூர் அருகே உள்ள வதியன்கொட்டாய் காட்டுப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் அஜித் பிணமாக தொங்கி கொண்டிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அஜித் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் அஜித் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.