புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வயலோகம் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளியில் படித்து வரும் 15க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மாதம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்து வந்த நித்திஷ்வரன்(7) என்ற மாணவன் மஞ்சள் காமாலை நோயினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனை அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் தொடர்ந்து மருத்துவமுகாம் நடத்தி வந்த நிலையில் நேற்று அன்னவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அபிராமசுந்தரி, வெங்கடேசபிரபு ஆகியோர் தலைமையில் ஆய்வு நடத்தினர். அப்போது அங்குள்ள குடிநீர் தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தது மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாமல் இருப்பது குறித்து பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும் ஒரே நேரத்தில் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்கியதால் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். எனவே நோய்த்தொற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், ஊராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.