நீலகிரி மாவட்டம் கூடலூர் தோட்டமூலா பகுதியில் உம்மு சால்மா(34) என்பவர் வசித்து வருகிறார். இவரது தாய் மற்றும் தந்தை உயிரிழந்து விட்டதால் அவர்களது குடும்ப சொத்து 42 சென்ட் உம்மு சால்மாவுக்கு எழுதி வைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த 42 சென்ட் நிலத்தை எல்லை வரையறை செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு கூடலூர் தாசில்தாரிடம் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்திருந்தார்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அவர் மார்ச் 2024-ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி கூடலூர் தாசில்தார் ராஜேஸ்வரி நில அளவீடு செய்து எல்லை வரையறை செய்து கொடுமாறு உத்தரவிட்டார். இந்நிலையில் தாசில்தார் ராஜேஸ்வரி நீதிமன்ற உத்தரவை பின்பன்றமல் உம்மு சால்மாவிடம் நில அளவீடு செய்ய 2 லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இதற்கு உம்மு சால்மா மறுத்ததால் அவரை அலைக்கழித்து கடைசியாக 50,000 ரூபாயை கேட்டார்.
இதுகுறித்து உம்முசால்மா லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய 20 ஆயிரம் ரூபாயை உம்மு சால்மாவிடம் கொடுத்து அதனை தாசில்தார் ராஜேஸ்வரியிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். அவரும் அதிகாரிகள் சொன்னதுபோன்று செயல்பட்டார். அப்போது தாசில்தார் ராஜேஸ்வரி லஞ்ச பணத்தை பெறும்போது அதிகாரிகள் அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.