கடந்த ஆண்டு செப்டம்பர் 15 முதல் திமுக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக திருப்பூர் மாவட்டத்தில் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மகளிர் உரிமைத் தொகைக்காக விடுபட்ட பெண்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உரிமை தொகை வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்ட போஸ்டர் ஒன்று வெளியானது.
இதனை பார்த்த காங்கேயம், பெருமாநல்லூர் கே.வி.ஆர் நகர், அவிநாசி, முதலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெண்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர். இதனை அறிந்த ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் இதுபோன்ற முகாம்கள் எதுவும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளனர். ஆனாலும் பெண்கள் அங்கிருந்து செல்லாமல் வெகு நேரம் காத்திருந்தனர்.
இதன் பிறகு தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு மக்களின் உரிமை தொகை வழங்கப்படும் சமூக வலைத்தளம் மூலம் பரவும் வதந்திகள் உண்மை இல்லை எனவும் அதனை நம்ப வேண்டாம் என கூறினர். இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.