கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை வழியாக அரசு மகளிர் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. காலை என்பதால் அந்த பேருந்தில் பள்ளிக்கு மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக அளவில் காணப்பட்டனர். இந்நிலையில் மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த பேருந்தில் திடீரென வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது.
இதனை கவனித்த பேருந்து ஓட்டுநர் உடனடியாக சாலையோரத்தில் பேருந்தை நிறுத்தி ஆய்வு செய்தபோது பின்பக்க டயர் பாதி கழன்ற நிலையில் நட்டு, போல்ட்டு உடைந்து காணப்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பேருந்தில் இருந்த பயணிகளை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து அவர்கள் வேறு பேருந்தில் ஏற்றிவிடப் பட்டனர். மேலும் ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு சரியான நேரத்தில் பேருந்தை நிறுத்தியதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.