அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வீரபோகம் பகுதியில் உள்ள ரதி மன்மதன் கோவிலில் அப்பகுதியை சேர்ந்த சந்தனவேல் பூசாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று அந்த கோவிலில் உள்ள சாமி சிலை உடைக்கப்பட்டு இருந்தது. இதனை அறிந்த விஸ்வ இந்து பரிசத் மாவட்ட தலைவர் முத்துவேல் தலைமையில் ஊர் மக்கள் அப்பகுதியில் திரண்டனர்.
இதுகுறித்து பாண்டுரங்கன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் மீன்சுருட்டி போலீசார் ரதி மன்மதன் கோவிலுக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் கோவில் பூசாரி சந்தனவேலை பிடித்து விசாரணை செய்ததில் உண்மை வெளிவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அப்பகுதி வாலிபர்கள் சிலர் சந்தனவேலை கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர் தினமும் கடவுளிடம் அந்த வாலிபர்களை தண்டிக்குமாறு பிராத்தனை செய்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து நேற்று மதுபோதையில் இருந்த சந்தனவேல் கோவிலுக்கு சென்று அவரது வேண்டுதலை சாமி நிறைவேற்றாததால் ஆத்திரமடைந்து சாமி சிலையை உடைத்ததாக தெரிவித்தார். இதனை கேட்ட போலீசார் சந்தனவேலை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.