திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியில் ஓய்வு பெற்ற அரசு பேருந்து நடத்துனரான ராஜேந்திரன்(68) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவரது மனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்த ராஜேந்திரன் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் இருக்கும் எம்.ஜி.ஆர் சாலையில் உள்ள உயர் மின் அழுத்த கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் உடனடியாக கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ராஜேந்திரனிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது ராஜேந்திரன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நிலையில், சட்டமன்ற தேர்தல் மனு நிராகரிப்பட்டது வேண்டுமென்ற செய்த சதி என குற்றம் சாட்டி கீழே இறங்க மறுத்துள்ளார்.
மேலும் தாசில்தார் விக்னேஷ் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி 3 மணி நேர போராட்டத்திற்கு பின்பு ராஜேந்திரனை தீயணைப்பு வீரர்கள் குண்டுக்கட்டாக தூக்கி கீழே அழைத்து வந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.