சென்னை-மஸ்கட்டுக்கு செல்வதற்கு இதுவரை ஓமன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மட்டுமே நேரடி விமான சேவையை இயக்கி வந்தது. இந்த ஏர்லைன்ஸ் அல்லாமல் மற்ற நிறுவனங்களின் விமான சேவைகள் சென்னையில் இருந்து மும்பை வழியாக மஸ்கட்டுக்கு செல்கிறது. மேலும் பாரீஸ், லண்டன், பிராங்பார்ட்போன்ற நகரங்களுக்கு செல்ல இணைப்பு விமானங்கள் மஸ்கட்டில் இருந்து புறப்படுவதால் அதிக பயணிகள் மஸ்கட்டுக்கு தினந்தோறும் செல்கின்றனர்.
இந்நிலையில் பெரும்பாலான பயணிகள் நேரடி விமானத்தை விரும்புவதால் ஓமன் ஏர்லைன்ஸ் விமானங்கள் எப்போதும் நிரம்பி வழிகின்றன. எனவே ஓமன் நாட்டை சேர்ந்த சலாம் ஏர் நிறுவனம் தற்போது மஸ்கட்-சென்னை-மஸ்கட் இடையே புதிய விமான சேவையை நேற்றிலிருந்து தொடங்கியுள்ளது.
இந்த விமானம் அதிகாலை 4.15 மணிக்கு மஸ்கட்டில் இருந்து சென்னை வந்தடைந்து, மீண்டும் 5 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு 8.45 மணிக்கு மஸ்கட் சென்றடையும். இதனையடுத்து பயணிகளின் வரவேற்பை பொறுத்து இந்த விமான சேவை தினந்தோறும் இயக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சலாம் ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த புதிய நேரடி சேவை விமானத்தால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.