திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கவுண்டச்சிப்புதூர் பஞ்சாயத்து தலைவியாக செல்வி ரமேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த பஞ்சாயத்திற்கு 2.75 கோடி வளர்ச்சி திட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்கி அதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் கவுண்டச்சிப்புதூர் வார்டுகளில் கடந்த 3 வருடங்களாக எவ்வித வளர்ச்சி திட்ட பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு பல்வேறு முறை கடிதங்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் கவுண்டச்சிப்புதூர் பஞ்சாயத்து தலைவி செல்வி ரமேஷ் நேற்று முன்தினம் தாராபுரம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் செல்வி ரமேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பஞ்சாயத்து தலைவி அதனை ஏற்காமல், பஞ்சாயத்திற்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்கும் வரை தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார். இந்நிலையில் நேற்று 2-வது நாளாக அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.