நீலகிரி மாவட்டம் தூனேரி அவ்வூர் பகுதியில் பிரதாப்(44) என்பவர் வசித்து வருகிறார். அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவருக்கு சிந்து மேனகா(34) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சம்பவத்தன்று காலையில் இவர் பேருந்தை ஓட்டி கொண்டு கூட்டாடாவில் இருந்து கோத்தகிரி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கோவில்மட்டம் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது மழை பெய்ததால் சாலையின் நடுவே மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனை பார்த்த பிரதாப் உடனடியாக பேருந்தை நிறுத்தி பயணிகளை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினார்.
இதை கேட்ட பயணிகளும், நடத்துனரும் பேருந்தில் இருந்து கீழே இறங்கினர். இதையடுத்து பிரதாப்பும் அவர் இருந்த இருக்கைக்கு அருகில் உள்ள கதவை திறந்து கீழே இறங்க முயன்றார். அப்போது சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியின் பேருந்தின் மீது உரசியதில் பிரதாப் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உயிரிழந்த பிரதாப்பின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களையும், முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் அவரது குடும்பத்தினருக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்.