தேனி மாவட்டம் சீலையம்பட்டி பகுதியில் காளியம்மன் தெருவில் வசித்து வரும் பாண்டி என்பவருக்கு ரித்திகா என்ற மகள் உள்ளார். 8 வயதான ரித்திகா அப்பகுதியில் உள்ள தனியார் நடுநிலை பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகினார். சம்பவத்தன்று காலையில் ரித்திகா வழக்கம்போல பள்ளிக்கு சென்று வகுப்பறையில் அமர்ந்து இருந்தபோது திடீரென வகுப்பறையின் மேற்கூரை இடிந்து சிறுமியின் தலையில் விழுந்துள்ளது.
இதில் ரித்திகாவிற்கு தலை உடைத்து மிகுந்த ரத்தம் வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்த வகுப்பு ஆசிரியர் உடனடியாக அவரை அழைத்து சென்று முதலுதவி அளித்துள்ளார். இதனையடுத்து தலைமை ஆசிரியருக்கும், மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நேரத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளி கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்யவில்லை என்றும், அதனை பராமரிக்க தவறிவிட்டனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். ஆகவே இனியாவது இது போன்ற விபத்துகள் நடக்காமல் தடுக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.