குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதிலும் குளிர்ச்சியான வானிலையே நிலவுகிறது. மலையோர பகுதிகளில் அதிக கனமழை பெய்ததால் தச்சமலை, மோதிரமலை, குற்றியாறு என 12 மலையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாப்பான பகுதியில் இருக்குமாறு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து காளிகேசம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அப்பகுதியில் தொழிலாளர்களுடன் சென்ற டெம்போ ஒன்று சிக்கியது. வெள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்களை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். மேலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் நீர்வரத்து அதிகரித்ததால் பெருஞ்சாணி அணையில் இருந்து 4,008 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் கோதையாறு, வள்ளியாறு, குழித்துறை, பரளி ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனைத்தொடர்ந்து திற்பரப்பு அருவியில் தண்ணீர் அதிகரித்ததால் அங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார். மேலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, முக்கடல் அணை என அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துகொண்ட வருவதால் பொதுப்பணித்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.