அரியலூர் மாவட்டம் உட்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் வீரமுத்து – ரேவதி தம்பதியினர். இவர்களது மகள் சங்கீதாவை கும்பகோணத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில் கடந்த 38 நாட்களுக்கு முன்பு மகள் சங்கீதாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தைக்கு சாதிக் என்று பெயர் சூட்டி பெற்றோர் மகிழ்ந்துள்ளனர். குழந்தையுடன் தனது தாய் தந்தை வீட்டில் சங்கீதா இருந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி தனது அருகில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை காணாமல் போனதை பார்த்து சங்கீதா அதிர்ச்சி அடைந்துள்ளார்.
குழந்தையை தேடிய போது வீட்டுக்கு பின்னால் இருந்த தண்ணீர் பேரலில் குழந்தை மூழ்கடிக்கப்பட்டு இறந்து கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டான் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் குழந்தையின் தாத்தா பாட்டியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த தாத்தா வீரமுத்துவை போலீசார் விசாரித்ததில் தனது பேரனை தான் கொன்றதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
கிராமத்தினர் உறவினர் சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்ததால் குடும்பத்தில் ஆண் உயிருக்கு ஆபத்து என்று கூறி பயமுறுத்தியதால் வீட்டில் தன்னைத் தவிர ஆண்மகன் இல்லாததால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்று நினைத்து குழந்தையை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீஸ்சார் வீரமுத்துவை கைது செய்தனர்.