கடலூர் மாவட்டம் பேரளையூர் பகுதியில் வசித்து வந்த தனலட்சுமி என்ற மூதாட்டிக்கு பன்னீர் செல்வம் என்ற மகனும் புஷ்பவள்ளி என்ற மருமகளும் உள்ளனர். இவர்களுக்கு சிவக்குமார் என்ற மகன், சிவரஞ்சனி மற்றும் சிவசத்யா என 2 மகள்கள் உள்ளனர். சிவரஞ்சனிக்கு திருமணம் முடிந்து அவர் கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பன்னீர் செல்வம் மற்றும் சிவக்குமார் சில வருடங்களுக்கு முன் உயிரிழந்து விட்டதால் சிவசத்யா மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் தனலட்சுமி தனது மருமகள் புஷ்பவள்ளி மற்றும் சிவசத்யாவுடன் வசித்து வந்துள்ளார். மேலும் சிவசத்யாவிற்கு திருமணம் ஆகாததால் ஏன் எனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என அடிக்கடி வீட்டில் சண்டை போடுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று புஷ்பவள்ளி வீட்டில் இல்லாத சமயத்தில் சிவசத்யா தனது பாட்டியான தனலட்சுமியிடம் சென்று தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டு சண்டை போட்டுள்ளார்.
இவர்களுக்கு நடந்த தகராறில் ஆத்திரமடைந்த சிவசத்யா வீட்டில் இருந்த இரும்புக்கம்பியை எடுத்து தனலட்சுமியை பயங்கரமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனலட்சுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சிவசத்யாவிடம் விசாரணை நடந்திய போது அவர், நான் தான் பாட்டியை கொன்றேன் எனவும் என் அருகில் நீங்கள் வந்தால் தற்கொலை செய்து விடுவேன் என போலீசாரை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் சிவசத்யாவை வீட்டிலேயே காவலில் வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.