சமீப காலமாக மர்மநபர்கள் காவல்துறை, சி.பி.ஐ., சுங்கத்துறை அதிகாரிகள் என பொதுமக்களை தொடர்பு கொண்டு அச்சுறுத்தி பணம் பறித்து வருகின்றனர். குறிப்பாக அவர்கள் பெற்றோர்களை குறி வைத்து வாட்ஸ்அப் கால் மூலமாக உங்களது மகன் அல்லது மக்கள் மீது வழக்கு இருப்பதாகவும், அவர்களை கைது செய்துள்ளோம் என கூறுகின்றனர். இதை கேட்டு அதிர்ச்சி அடையும் பெற்றோர் தங்களது மகன் அல்லது மகளை காப்பாற்ற மர்மநபர்கள் கேட்கும் பணத்தை கொடுக்கின்றனர்.
இது குறித்து முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் பாகிஸ்தான் சைபர்கிரைம் குற்றவாளிகள் சிலர் தனது புகைப்படத்தை பயன்படுத்தி இந்தியர்களிடம் பணம் பறிக்க முயற்சி செய்கிறார்கள் எனக் கூறி, அவர் பெயரை பயன்படுத்தி பணம் பறித்த வீடியோ ஆதாரத்தை பதிவிட்டுள்ளார். மேலும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், இது போன்ற வீடியோ அழைப்பு அல்லது குறுஞ்செய்தி மூலமாக மிரட்டல் வந்தால் உடனடியாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.