காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி நடுநிலை பள்ளியில் 61 லட்சத்தி 73 ஆயிரம் ரூபாய் செலவில் 3 கட்டிடங்கள் கட்டப்பட்ட கடந்த 3 மாதத்திற்கு முன் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இந்த கட்டிடத்தில் 6, 7, 8- ஆம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று 7ஆம் வகுப்பு நடைபெறும் கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது. மாணவர்கள் வகுப்பறைக்குள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து அங்கு படிக்கும் மாணவர்களின் பெற்றோர் சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் இடிந்து விழும் அளவிற்கு தரமற்ற கற்கள் மற்றும் எம் சாண்ட் வைத்து கட்டியிருப்பதாக புகார் அளித்துள்ளனர். மேலும் இப்போதே அந்த கட்டிடங்களில் கீறல் விழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே மாவட்ட ஆட்சியர் உடனே பள்ளி நேரில் வந்து பார்வையிட்டு தரமில்லாமல் கட்டிய இந்த கட்டிடத்தை இடித்து விட்டு, புதிதாக கட்டிடம் கட்டி தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் இதுபோன்று தரமில்லாத கட்டிடங்களை கட்டும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தினர்.