விழுப்புரம் மாவட்டம் நத்தமேடு பகுதியை சேர்ந்த சந்துரு(20) கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மர்மநபர்கள் சிலர் பிளிப்கார்ட் செயலி ஊழியர்கள் போல செல்போனில் தொடர்பு கொண்டனர். அவர்கள் பிளிப்கார்ட் குலுக்கல் பரிசில் சந்துருவிற்கு 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் விழுந்துள்ளதாக தெரிவித்தனர்.
இதனை நம்பிய சந்துரு மர்மநபர்கள் கேட்ட விவரத்தை அனுப்பியுள்ளார். இதனையடுத்து 12 லட்சத்தை பெறுவதற்கு நகர்வு கட்டணம், டெலிவரி கட்டணம் என கூறி 5 தவணைகளாக சுமார் 1 லட்சம் வரை பெற்றுள்ளனர். இந்த பணத்தை பெற்ற மர்மநபர்கள் சந்துருவை தொடர்பு கொள்வதை திடீரென நிறுத்தியுள்ளனர்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சந்துரு உடனடியாக விழுப்புரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.