பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பாரதிய ஜனதா முன்னாள் நிர்வாகி ரவுடி அஞ்சலையை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த ஆற்காடு சுரேஷ் எனக்கு நன்றாக தெரிந்தவர், அவர் கொலை செய்யப்பட்டது நான் மிகவும் வேதனை அடைந்தேன்.
இந்த கொலைக்கு ஆம்ஸ்ட்ராங் பின்னால் இருப்பது எனக்கு தெரிய வந்த நிலையில் அவரை பழிக்கு பழி வாங்க வேண்டும் என்று நேரம் பார்த்து காத்திருந்தேன். ஏற்கனவே நான்கு ரவுடி கும்பல்கள் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம் தீட்டி கொண்டிருப்பது எனக்கு தெரியவந்தது. அந்த கும்பலை ஒன்றிணைத்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டமிட்டோம். மேலும் 4 முறை அவரை கொலை செய்ய முயன்றபோது ஆம்ஸ்ட்ராங் அதிர்ஷ்டவசமாக தப்பிவிட்டார்.
எனவே 5-வது முறை சரியான திட்டம் போட்டு ரவுடி கும்பல் ஆயுதங்களுடன் களத்தில் இறங்கி கொலை செய்தனர். ரவுடிகளுக்கு பண உதவி மற்றும் ஆலோசனைகள் மட்டும் நான் வழங்கினேன். இந்த வழக்கில் எனக்கு நேரடி தொடர்பு கிடையாது என அஞ்சலை பரபரப்பு வாக்குமூலம் வழங்கியுள்ளார். மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய 10 ரவுடிகள் குறித்து அஞ்சலை தெரிவித்த நிலையில் போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.