திருச்சி மாவட்டம் மணப்பாறை வீரப்பூர் பகுதியில் சுதாகர் என்பவர் மெடிக்கல் கடை ஒன்றை நடத்தி வந்தார். கடந்த 1ஆம் தேதி அன்று அவரது கடைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் என கூறி மர்ம நபர்கள் நுழைந்தனர். இந்நிலையில் அவரது கடையை சோதனை செய்த பின்பு விசாரணைக்கு எங்களுடன் வருமாறு அழைத்து சென்றனர்.
இதனையடுத்து மர்ம நபர்கள் சுதாகரின் குடும்பத்தினருக்கு தொடர்பு கொண்டு சுதாகரை விடுவிக்க வேண்டும் என்றால் 20 லட்சம் பணம் கொடுக்கவேண்டும் என மிரட்டியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக மாவட்ட சூப்பிரண்டு அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை நடத்திய அதிரடி விசாரணையில் அந்த மர்ம நபர்கள் கேரளாவை சேர்ந்த நவ்ஷாத், வைரி செட்டிபாளையத்தை சேர்ந்த சேகர், மதுரையை சேர்ந்த மாரிமுத்து, சென்னையை சேர்ந்த வினோத், வலையப்பட்டியை சேர்ந்த சுதாகர், தொப்பம்பட்டியை சேர்த்த கார்த்திகேயன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களை மணப்பாறை-திருச்சி நெடுஞ்சாலையில் வைத்து கைது செய்து சுதாகரை மீட்டனர்.
இதுகுறித்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கும்பல் ஏற்கனவே ஜவுளி வியாபாரியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் என நடித்து 5 லட்சம் ரூபாய் மற்றும் 5 பவுன் நகை கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. மேலும் இவர்களுக்கு கூட்டாளியான சக்திவேல், மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து கைதான 8 பேரையும் சிறையில் அடைத்துள்ளனர்.