தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை கொண்டு வருவதற்கு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி கடந்த ஜனவரியில் சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூரை சேர்ந்த செம்கார்ப் நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் 36 ஆயிரத்தி 238 கோடி ரூபாய் முதலீட்டில் பசுமை ஹைட்ரஜன் அலகு தொழிற்சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் பசுமை ஹைட்ரஜன் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இந்நிலையில் செம்ப்கார்ப் நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகளை 2 ஜப்பானிய நிறுவனங்களின் உதவியுடன் தொடங்கியுள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் 1,500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்த அறிவிப்பை தமிழக தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.