கோவை மாவட்டம் சுங்கம் பைபாஸ் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி அருகே மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சம்மந்தமின்றி நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் உக்கடம் புல்லுக்காடு ஹவுஸிங் யூனிட் சேர்ந்த யாஷிக் இலாஹி, போளுவாம்பட்டியை சேர்ந்த மரியா, திப்பு நகரை சேர்ந்த முஜிப் ரகுமான், ஆர்.எஸ்.புரம் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த கிருஷ்ணன், சென்னை சேர்ந்த சினேகா ஸ்ரீ என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த பையில் 1 1/2 கிலோ கஞ்சா மற்றும் 200 போதை மாத்திரைகள் இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த 5 பேரையும் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து கஞ்சா விற்பனை, போதை மாத்திரை கடத்தல் போன்றவைகளுக்கு கோவை சேர்ந்த அப்துல் கலாம், ஆசிப் ஷெரீப், ரிஸ்வான், வட மாநிலத்தை சேர்ந்த சச்சின் ஆகிய 4 பேர் இவர்களுக்கு உதவி செய்து வந்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அந்த 4 பேரையும் தேடி வருகின்றனர். மேலும் இந்த கும்பல் ஆன்லைன் மூலம் வலி நிவாரண மாத்திரைகள் என போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்தனர். குறிப்பாக கல்லூரி மாணவ மாணவிகளை குறிவைத்து அவர்களிடம் போதை பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர். கைதான மரியா மற்றும், யாசிக் இலாஹி சினிமாவில் துணை நடிகர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.